மோடி அரசுக்கு தபன்சென் எச்சரிக்கை
சேலம் உருக்காலை உட்பட நாட்டிலுள்ள எந்தவொரு பொதுத்துறை உருக்காலையை யும் தனியாருக்குத் தாரைவார்த்திட மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டித்து உருக்காலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.அவர்களின் வேலைநிறுத்தத்தை ஆதரித்தும், மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சிஐடியு பொதுச் செயலாளருமான தபன் சென் மாநிலங்களவையில் பேசியதாவது :
‘நாட்டின் வளங்களாகக் கருதப்படும் உற்பத்தித் தொழிற்சாலைகளை, எவ்விதமான சிந்தனையுமின்றி தனியாருக்குத் தாரை வார்த்திட மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.செவ்வாய்க்கிழமை முதல் துர்காபூர் ஸ்டீல் பிளாண்ட், சேலம் ஸ்டீல் பிளாண்ட்,கர்நாடகாவில் உள்ள பத்ராவதி ஸ்டீல் பிளாண்ட், தொழிலாளர்கள் தனியார்மயமாக்குவதற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.நாட்டில் தனியார்துறை எதிலும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களாகும், இந்த மூன்று நிறுவனங்களும். மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருபவைகளாகும். இவற்றை எவ்விதமான சிந்தனைத்தெளிவுமின்றி தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. இதேபோன்று இந்தியாவின் நீர்வழிப்பாதைகளைச் செப்பனிட்டுக் கவனித்து வரும் இந்திய தூர்வாரும் கார்ப்பரேசன் (Dredging Corporation of India) தொழிலாளர் களும் வேலைநிறுத்தத்தில் இறங்குகிறார்கள். இதேபோன்று பிரிசிசன் இன்ஜினியரிங் வொர்க்ஸ் நிறுவன தொழிலாளர்கள் அனை வரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.இவற்றைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கும் மத்திய அரசின் அடாவடித்தனமான நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் மே மாதத்தில் பெங்களூரு, மைசூரு, கோலார் ஆகிய இடங்களில் பணியாற்றிவரும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகிறார்கள்.நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது, நம் நாட்டின் உற்பத்தி வல்லமையையே, ‘‘இந்தியாவில் உற்பத்தி செய்க’’ என்ற முகமூடியின் கீழ் தகர்த்திடும் சூழ்ச்சியாகும். நாட்டிற்குள் அந்நிய மூலதனம் மிக எளிதாகப் புகுந்திட வழி அமைத்துக் கொடுப்பதே இதில் பொதிந்துள்ள முக்கிய விஷயமாகும்.
இதற்கு எதிராகத்தான் தொழிலாளர்கள் இவ்வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். மேற்கண்ட நிறுவனங்களில் பணியாற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை காக்க செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக இயக்கங்களின் ஊழியர்களது பிணங்களின் மீது நடந்து சென்றுதான் பொதுத்துறை நிறுவனங்களை இந்த அரசால் தனியாருக்குத் தாரை வார்த்திட முடியும். எனவே, தனியார் மயம் என்ற தேசவிரோத நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தபன்சென் கூறினார்.