மக்கள் ஒன்றுபடுவதை ஆபத்தானதாகக் கருதுகிற சக்திகள் மதத்தின் பெயரால் பகை வளர்க்க முயல்வது பற்றி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று திரிபுராமுதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் கூறினார்.காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொதுவாழ்வு நேர்மைக்கான காயிதே மில்லத் விருதுவழங்கப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட வீரரும் சுதந்திரஇந்தியாவின் அரசமைப்பு சாசனக்குழு உறுப்பினருமான காயிதே மில்லத் பெயரில் இயங்கிவரும் இந்த அறக்கட்டளை ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, குஜராத் மனித உரிமைப் போராளி டீஸ்டா செதல்வாத், இந்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்து பின் னர் அரசியலில் ஈடுபட்டவரும் பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து சட்டப்பூர்வ போராட்டத்தை நடத்தியவருமான அண்மையில் காலமான சையத் சஹாபுதீன் ஆகியோருக்கு இந்த விருதினை வழங்கியிருக்கிறது.
மூன்றாவது ஆண்டாக இம் முறை, மாணிக் சர்க்கார், ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் தமிழகசட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி. முகமது இஸ்மாயில், மணிப்பூரில் சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை விலக்கக்கோரி14 ஆண்டுகள் உண்ணாநிலை போராட்டம் நடத்திய இரோம்ஷர்மிளா ஆகியோர் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சை காரணமாக இரோம் ஷர்மிளா நேரில் வர இயலவில்லை. அவரது பழங்குடி மக்கள் பகுதிக்கே சென்று அவரிடம் விருதுஒப்படைக்கப்படும் என்று விழாவில் அறிவிக்கப்பட்டது.
வளர்க்கப்படும் சுயநலம்
விழாவில் ஏற்புரையாற்றிய மாணிக் சர்க்கார், “இன்றைய உலகமயப் பொருளாதாரச் சூழலில்சுயநல உணர்வும், மற்றவர்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ,உலகின் பிற பகுதிகளில் வாழ்வோர் பற்றியோ கவலையற்றமனப்போக்கும் வளர்க்கப்பட்டுள் ளன. கல்வியாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இளைய தலைமுறையினரிடையே காயிதே மில்லத் போன்றவர்களது வாழ்க்கையையும், பொதுநல அக்கறையையும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை இருக்கிறது,” என்றார். “மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கிறவர்களாக உருவாக்குவதை விடவும், சக மனிதர்களை மதிக்கிறவர்களாக, நேசிக்கிறவர்களாக உருவாக்குவதே மிக முக்கியம்,” என்றார் அவர்.அவரது உரையின் முக்கியப் பகுதிகள் வருமாறு:நாடு இன்று மிகச் சிக்கலானகாலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்றுசில சக்திகள் கூறுகின்றன. அதற் காக ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்புகின்றன. இந்து மதத்திற்கு முன்பாக உலகில் வேறெங்கும் வேறு எந்த மதமும் இருந்ததில்லை என்பதாக, வரலாற்று சாட்சியம் எதுவும் இல்லாமல் கூறுகிறார்கள். இந்தியாவின் அரசமைப்பு சாசனமோ அனைத்து வகை நம்பிக்கைகளைச் சார்ந்தோரும் அவரவர் நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை அளிக்கிறது. அதை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று அந்தசக்திகள் துடிக்கின்றன.இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் விட அதிகமான இஸ்லாமிய மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். தங்கள் தாயகம் இந்தியாதான் என்ற உணர்வோடு அதை நேசிக்கிறவர்கள் அவர்கள்.ஆனால், இந்துவாக மாறுவதற்கோ, இந்து நாடாக மாற்றுவதற்கோ உடன்படாத இஸ்லாமியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறட்டும், ஆப்கானிஸ்தானுக்கோ மத்திய கிழக்கு நாடுகளுக்கோ போகட்டும், கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்தவ நாடுகளுக்குப் போகட்டும் என்றெல்லாம் பகையுணர்வைக் கிளறும் வகையில்நச்சுக் கருத்துகள் பரப்பப்படுகின்றன.
திசை திருப்பவே மதவாதம்
அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இப்படி மதவெறி ஊட்டப்படுகிறது. ஒருபுறம் ரூபாய் மதிப்பு மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இன்னொருபுறம் பணவீக்கம் - குறிப்பாகக் கட்டாயத் தேவையான உணவுப் பொருள்களின் விலை - பலமடங்கு அதிகரித்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை 32 சதவீதம் அதிகரித்துவிட்டது. விவசாயிகள்தற்கொலை நடக்காத ஒரே மாநிலம் திரிபுராதான்.நாடு முழுவதும் படித்தவர்களும், ஓரளவு படித்தவர்களுமாக சுமார் 25கோடிப் பேர் வேலை கிடைக்காதவர்களாக இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றுகிற ஆற்றல் இளமைப்பருவத்திற்கே உரியது. ஆனால் வேலையின்மை காரணமாக இவர்களின் அந்த ஆற்றலை நாடு பயன்படுத்திக்கொள்ள முடியாதிருக்கிறது. அந்த ஆற்றலைப் பயன்படுத்தவும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் எந்தவொரு திட்டமும் மத்திய ஆட்சியாளர்களிடம் இல்லை.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான ஊழல் வழக்குகள் குவிந்துள்ளன. அதேவேளையில் சுமார் 32லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பெருநிறுவனங்களால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகிறது. அதை மீட்க எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு கடத்துகிறவர்களின் பெயர்களை வெளியிடவும் மத்திய அரசு தயாராக இல்லை.31 பெரும் கார்ப்பரேட்டுகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினர். இன்று அதற்குப் பெயர் வராக்கடன் என்றாகிவிட்டது. அதை அவர்களிடமிருந்து கைப்பற்றுவதற்கு பதிலாக 1200 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது.மடிந்துகொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை. எளிய விவசாயி தனது கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றால் காவல்துறை உள்ளிட்ட அரசு எந்திரங்கள் உதவியோடு அவர் அவமதிக்கப்படுகிறார். ஆனால் இப்படி மக்கள் பணத்தைக் கடத்தியவர்களுக்கு சலுகை தரப்படுகிறது.நாட்டின் மக்கள் தொகையில் 75 சதவீதத்தினர் கிராமங்களில் வாழ்கிறார்கள். பெரும்பாலான கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்சாரம், கல்வி,மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட்டில், மனித ஆற்றல் மேம்பாட்டுக்கு ஆதாரமான இந்த அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து வெட்டப்படுகிறது. கல்விக்கும் பொது சுகாதாரத்துக்கும் மொத்த பட்ஜெட்டில் 5 சதவீத நிதிதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அரிக்கப்படும் மையக்கூறு
இதையெல்லாம் காண்கிற மக்கள்தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுப் போராட முன்வருகிறார்கள். அவ்வாறு மக்கள்ஒன்றுபடுவதை ஆபத்தான வளர்ச்சிப்போக்காக சில சுயநல, மதவெறி சக்திகள்கருதுகின்றன. அவ்வாறு ஒன்றுபடுவதைச் சீர்குலைக்கவே இந்து நாடு என்ற முழக்கத்தை எழுப்புகின்றன.நான் இந்து மதத்துக்கு எதிரி அல்ல.எந்த மதமுமே பிற மத நம்பிக்கை உள்ளவர்களை வெறுப்பதற்குப் போதிக்கவில்லை. அன்பையே போதிக்கின்றன. கடவுள் மீது உண்மையான நம்பிக்கை இருக்குமானால் கோவிலுக்கோ, மசூதிக்கோ, தேவாலயத்திற்கோ போக வேண்டியதில்லை, சக மனிதர்களை நேசித்தால் போதும், புன்னகையோடு பழகினால் போதுமென்றே மத வேதங்கள் சொல்கின்றன.காயிதே மில்லத் உறுப்பினராக இருந்தஅரசமைப்பு சாசனக்குழு உருவாக்கிக் கொடுத்த அரசமைப்பு சாசனத்தின் மையக்கூறு ஜனநாயகமும் மதச்சார்பின்மையும்தான். அந்த மையக்கூறு இன்று அரிக்கப்படுகிறது. ஆகவே, எதிர்காலத் தலைமுறைகளுக்கு வாழ்க்கைக்கல்வியும் சமூகக் கல்வியும் மிகவும் தேவைப்படுகின்றன.
விதைக்க வேண்டிய சிந்தனை
திரிபுரா மாநிலத்தில் தொடக்கநிலைக் கல்லூரிப்படிப்பு வரையில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. தமிழகச்சூழலில், காயிதே மில்லத் அறக்கட்டளையின் இந்தக் கல்லூரியில் மிக மிகக் குறைந்த கட்டணத்தில், பழங்குடியினருக்கும் தலித் மக்களுக்கும் பிற்பட்டோருக்கும் சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் கல்வி வழங்கப்படுவதையறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்திற்கு வெளியேயும் இந்தச் சேவை விரிவடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.இளையோர் மனங்களில் சாதிய, மதவாதப் பாகுபாடுகளை விதைக்க சில சக்திகள் தீவிரமாக முயல்கின்றன. அதை முறியடிக்க, அதற்கு மாறான நல்லிணக்கச் சிந்தனைகளை விதைக்க நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு முதல்வர் மாணிக் சர்க்கார் பேசினார்.