இவர்கள் சொன்னார்கள்-
‘புதுயுகம் படைப்போம்,
புது வாழ்வு அளிப்போம்,
போடுங்கள் அனைவரும்
‘புரட்சி’க்கே வாக்குகள்’ என்று...
ஆனால்…
நடந்தது என்னவோ-
ஊழலும்… கொள்ளையும்…
பாவத்தின் சம்பளமாய்
தண்டனையும்… சிறையுமே…
இவர்கள் சொன்னார்கள்-
‘வசதியைப் பெருக்குவோம்,
மக்களை உயர்த்துவோம்,
வாக்களிப்பீர் யாவரும்
வாழ்’வுதயம்’ பெறவே’ என்று...
ஆனால்…
உயர்ந்தது என்னவோ-
அவர்களின் மக்களும்
அளவற்ற வசதியுமே…
இவர்கள் சொன்னார்கள்-
‘தியாகிகள் நாங்கள்,
தேர்ந்தெடுப்பீர் ஆட்சிக்கு…
பாரத தேசத்தில்
பாலோடும் தேனோடும்,
குடம் நிறைய மொள்ளலாம்,
குதூகலமாய் வாழலாம்’ என்று...
ஆனால்…
காத்திருந்த ஏழைகளுக்குக்
காணாமல் போனதெல்லாம்-
அவரவர்
குடங்களும் நம்பிக்கையுமே…
இவர்கள் சொன்னார்கள்-
‘ஆட்சியில் எங்களை
அமர்த்தியே பாருங்கள்,
அமைதியும் சுபிட்சமும் படைப்போம்’ என்று...
ஆனால்…
செய்தது என்னவோ-
‘இடித்ததும்’.. வதைத்ததும், மக்களை
ஏமாற்றி நடிப்பதுமே…
இப்போது…
மக்கள் சொல்கிறார்கள்-
‘வாக்குச் சாவடியில்
வாக்களித்த பின்னால்-
தேர்தலில் வெல்லும் ‘இவர்கள்’
தேசத்தில் பெரும் புள்ளிகள்…
வாக்காளர் முகங்களிலோ-
கரும்புள்ளி… செம்புள்ளிகள்…
எத்தனை காலம்தான்
ஏமாற்று வார் இவர் ?...
எப்போதும் மக்கள்
ஏமாந்து போவோமோ…?..
எழுவோம், தமிழகமே...!
- ந.காவியன்