Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 1, 2017

பொதுத்துறைக்கான போராட்டம் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவே! பிஎஸ்என்எல் ஊழியர் மாநாட்டை தொடங்கிவைத்து ஏ.கே. பத்மநாபன் முழக்கம்




2017 ஆம் ஆண்டு உழைப்பாளிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களின் ஆண்டாக மலரட்டும் என்று சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே. பத்மநாபன் வாழ்த்தினார். அரசின் தனியார்மயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்காமல் பொதுத்துறைகளைப் பாதுகாக்க முடியாது என்றார் அவர்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 8 ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் சனிக்கிழமையன்று (டிச.31) தொடங்கியது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள், சகோதரப்பிரதிநிதிகளாகப் பங்கேற்ற நேபாள தொலைத்தொடர்பு சம்மேளன தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பத்மநாபன், “இது பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கே கூட முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு,” என்று கூறினார்.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் செங்கொடியை உயர்த்திப் பிடித்த நீண்ட போராட்டப் பாரம்பரியத்தால்தான் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தனது வெற்றிகளைச் சந்தித்து கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. அரசாங்கம் பல கடுமையான தாக்குதல்களைத் தொடுத்த ஆண்டு இது. ஒரு பக்கம் தொழிற்சங்க உரிமைகள் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. மாற்றுக் கருத்துகளை முன்வைக் கிற சிந்தனையாளர்கள் தாக்கப் படுகிறார்கள்.

அரசு ஆசிர்வாதத்தோடு தாக்குதல்கள் இந்திய தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு நூற்றாண்டு வரலாறு உள்ளது. இன்று தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை கூட மறுக்கப்படுகிறது. நாடு முழுவதும் அந்த அடிப்படை உரிமையைப் பாதுகாக்கப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தொழிலாளி வர்க்க ஒற்றுமையின் மீதும் அரசாங்க ஆசிர்வாதத்தோடு தாக்குதல் தொடுக்கப்படுகிறது.பொதுத்துறையைப் பாதுகாப்பதுஎன்பது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதேயாகும்.

1991 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் முன்னணித் தொழிற்சங்க இயக்கங்கள் பொதுத்துறையைப் பாதுகாக்க ஒன்றுபட்டுப் போராடி வருகின்றன. உலகின்7பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்கள் நடந்திருந்தாலும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கென்று இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் போராடியது 
இந்தியாவில்தான். விகாஸ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (விஎஸ்என்எல்) என்ற பொதுத்துறை நிறுவனம் பின்னர் டாட்டாவின் பாக்கெட்டுக்குள் போனதை மறந்துவிடக்கூடாது.
கைப்பற்றப்பட்ட மக்கள் பணம் மத்தியில் மோடி அரசு பதவியேற்று 31 மாதங்கள் முடிகின்றன. 2014ல் அவர் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. 

இந்நிலையில்தான் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக என்றும், கள்ளப்பணத்தைத் தடுப்பதற்காக என்றும், பயங்கரவாதிகளுக்குப் பணம் போவதைத் தடுப்பதற்காக என்றும் சொல்லிக்கொண்டு செல்லாக்காசு அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். அவர் சொன்னபடி 50 நாட்கள் முடிந்தும், இதனால் மக்களுக்கு ஏற்பட்ட வேதனைகள் கொஞ்சமும் குறையவில்லை.

உண்மையில், பெருநிறுவனங்களுக்கு சேவை செய்வதற்காக வங்கித்துறையில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பதற்காக, எளிய மக்களிடமிருந்த பணத்தைக் கைப்பற்றுகிற நடவடிக்கைதான். இப்போதும் கூடவங்கித் துறையின் நெருக்கடி உச்சநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மோடி அரசின் இந்த நடவடிக்கையால், தனது உழைப்புக்கான ஊதியத்திலிருந்து 2,500 ரூபாய் வங்கியிலிருந்து எடுப்பதற்காக இரண்டு நாட்கள்வங்கி முன் காத்திருக்க வேண்டிய நிலைமையின் காரணமாக 800 ரூபாய்வரையில் கூலி இழப்பைத்தான் பல தொழிலாளர்கள் சந்தித்திருக்கிறார்கள். எளிய மக்களின் கூலிப்பணம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. 

இந்த உண்மைகளை மக்களிடையே எடுத்துச்செல்கிற பொறுப்பு, தொழிற்சங்கங்களுக்கு இருக்கிறது.
அமெரிக்காவில் தொலைத் தொடர்பு ஊழியர்கள் நடத்திய ஒன்றுபட்ட வெற்றிகரமான வேலைநிறுத்தப்போராட்டம் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.

ஒற்றுமையை சீர்குலைக்க...
அப்படிப்பட்ட ஒற்றுமையைக் கட்டவிடாமல் மதம், சாதி,பிரதேசம் என்ற பெயர்களில் சீர்குலைவு வேலைகள் திட்டமிட்ட முறையில் செய்யப்படுகின்றன. சாதியம் நாம் தேர்ந்தெடுத்தது அல்ல, நம் மீது திணிக்கப்பட்டதே. 

பெரும்பான்மை, சிறுபான்மைப் பிரிவுகள் எல்லாவற்றிலும் உள்ள இப்படிப்பட்ட சீர்குலைவு சக்திகளை முறியடித்தாக வேண்டும்.பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற போராட்டம் பின்தங்கிப்போயிருப்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். தொழிலாளர்கள் இனி பெண்களின் சமத்துவத்திற்கான போராட்டத்திற்காகவும் தெருவில் இறங்கியாக வேண்டும். உலக மக்கள் தொகையில் 0.7 சதவீதம் அளவுக்கே உள்ளவர்களின் கையில், உலகின் செல்வத்தில் 46 சதவீதம் சிக்கியிருக்கிறது.

இத்தகைய உலகளாவிய சூறையாடலுக்கும், அதற்கு உடந்தையாக இருக்கிற உலகமய, தனியார்மய கொள்கைகளுக்கும் எதிரான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.நவம்பர் புரட்சியின் நூற்றாண்டுகொண்டாடப்படுகிற இவ்வேளையில், அந்த சோவியத் யூனியன் சிதறிவிட்டாலும், அது வழங்கிய அறிவியல்பூர்வ சோசலிசம் என்ற கோட்பாடு உறுதியாக இருக்கிறது. அறிவியல்பூர்வ சோசலிசமே உண்மையான மாற்று. தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டங்கள் அந்த லட்சியத்தோடும் இணைந்திட வேண்டும்.இவ்வாறு ஏ.கே. பத்மநாபன் பேசினார்.
Image result for theekkathir