பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென்று தொழிலாளர்கள் மீது அக்கறை வந்துவிட்டது. `பண்டிட் தீனதயாள் உபத்யாயா ஷிரமேவ ஜயதே கார்யக்ரம்’ எனும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். `ஷிரமேவ ஜயதே’ என்றால் `உழைப்பே வெல்லும்’ என்று பொருள். மோடி வைக்கும் கோஷமெல்லாம் ஈர்ப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் அதன் உள்ளே இருப்பது அத்தனையும் விஷம்.
இத்திட்டத்தின்படி, வருங்கால வைப்புநிதிக்கு(பி.எப்) ஒரு யுனிவர்சல் நம்பர் கொடுக்கப்படும் என்கிறார் பிரதமர். சரி தான்.ஆனால் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வருவதற்கு தகுதியான நபருக்கு மாதம் ரூ. 15.000 சம்பளமாக இருக்க வேண்டும் (தற்போது ரூ. 6,500 மாதச் சம்பளம் இருந்தாலே போதும்) என்று சொல்லப்படுகிறதே. இன்றைக்கு இந்தியாவில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் ரூ.6,500 மாதச் சம்பளம் பெறுவதே அரிதாக இருக்கிறது. இதில் எங்கே ரூ. 15000 பெறுவது? யுனிவர்சல் நம்பரைப் பெறுவது? சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கள் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 15000 வழங்கப்பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றனவே?
தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக அமலாக்கப்படுகின்றனவா என்று கண்காணிக்க உதவுகின்ற தொழிற்சாலை ஆய்வாளரின் ஆய்வு என்பது சரியாக நடப்பது இல்லை. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று தொழிற்சங்கங்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, தொழிற்சாலை ஆய்வு என்ற முறையையே ஒழிப்பதாக மோடி கூறியிருப்பதும், ஒற்றைச் சாளர முறை மூலம் தொழிலாளர் துறை அமைச்சகத்தோடு தொடர்பு கொள்ளலாம் என்று சொல்வதும் எப்படி தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதாக இருக்க முடியும்?தொழிலாளர்கள் மிக எளிதாக தொடர்பு கொண்டு தீர்வுகளைப் பெறுவதற்கான சில அடிப்படையான, எளிமையான அடுக்குத் தொடர்பு நிலைகள் தற்போது இருக்கும் போதிலும் கூட நியாயமான தீர்வுகளை எட்ட முடியாமல் தொழிலாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனரே? அப்படியிருக்கும்போது இந்த `ஒற்றைச் சாளர முறை’யில் தொழிலாளர் துறை அமைச்சகம் உடனடித் தீர்வினை அளித்துவிடுமா?
குறுந்தகவல் மூலமாக 4.2 லட்சம் ஐடிஐ மாணவர்களையும், 1 கோடி வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களையும், 6.50 லட்சம் நிறுவனங்களையும், 1800 ஆய்வாளர்களையும் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது என்று மோடி பெருமை கொள்கிறார்.இந்த நாட்டில் உள்ள 45 கோடித் தொழிலாளர்களில் 94 சதமானம் பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனரே? அவர்களுக்கெல்லாம் உங்களது குறுந்தகவல் எனும் `பொக்கிஷம்’ கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தொழிலாளர் நலச் சட்டங்களினால் உள்ள நன்மைகள் கிடைக்குமா என்பது தான் கேள்வி.
அப்ரெண்டிஸ் முறையில் (தொழில் பழகுநர்) தொழிலாளர்களின் திறமைகளை முன்னேற்றுவதற்காக தான் அறிமுகப்படுத்தியுள்ள `பிரட்சாஹன் யோஜனா’ குறித்து சிலாகித்துள்ள பிரதமர் மோடி, தற்போது 2.82 லட்சம் அப்ரெண்டிஸ்கள் 4.9 லட்சம் காலியிடங்களுக்கான பயிற்சியை எடுத்துக் கொண்டு வருகின்றனர்: பழைய அப்ரெண்டிஸ்திட்டத்தில் உள்ள பழமையான ஷரத்துக்களை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. புதிய திட்டத்தினால் மார்ச் 2017க்குள் ஒரு லட்சம்அப்ரெண்டிஸ்கள் பயன் பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.நீதிபதி சந்துரு உட்பட பல சமூக ஆர்வலர்களும், இந்திய பொருளாதார நிபுணர்களும் மோடி அரசு தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தத்தில் அப்ரெண்டிஸ் முறையில் தற்போது கொண்டு வர முனைந்துள்ள திருத்தம் குறித்து கவலை தெரிவித்துள்ளனரே?அப்ரெண்டிஸ் சட்டம் 1961 திருத்தப்படுவதற்கான முன்மொழிவுகளின் படி, 250க்குக் குறைவான தொழிலாளர்களை கொண்ட ஒரு நிறுவனம் அப்ரெண்டிஸ்களை நியமிக்குமானால், பாதி செலவை மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும், 250க்கு மேலாக இருந்தால் நான்கில் ஒரு பங்கு செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். பல நேரங்களில் பயிற்சிக் காலம் முடிந்த பிறகும், ரெகுலர் தொழிலாளர்களாக மாற்றப்படுவதில்லை. விளைவு, அப்ரெண்டிஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது என்பதுதானே உண்மை?
தொழில் நடத்துவதற்கான நடைமுறைகள் அனைத்தையும் எளிமையானதாக மாற்ற வேண்டும்; `மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்) என்ற எனது திட்டத்தின் நோக்கமே தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளையும், வசதிகளையும் உருவாக்கித் தருவதே என்றும் மோடி கூறியிருக்கிறார்.தொழிலாளர் சட்டங்களையெல்லாம் ஒழிக்கப்போகிறேன் என்பதுதான் இதன்பொருள்.மோடி அரசால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சிறு தொழிற்சாலைகள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிலைமையை ஒழுங்குபடுத்தும்) மசோதாவானது, சிறு தொழிற்சாலைகள் அனைத்திற்கும் தொழிற்சாலை சட்டம் 1946, தொழில் தகராறு சட்டம் 1947, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948, சம்பளப் பட்டுவாடா சட்டம் 1936, தொழிற்சாலை வேலைவாய்ப்பு சட்டம் 1946, தொழிலாளர்களுக் கான அரசு இன்சூரன்ஸ் சட்டம் 1948, வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர பயன்கள் சட்டம் 1952, மகப்பேறுபயன் சட்டம் 1961, தொழிலாளர் இழப்பீடு சட்டம் 1923, மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயரும் தொழிலாளர்களின் வேலை மற்றும் சேவை நிலைகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 1979, மாநில அளவிலானகடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், சம வேலைக்கு சம கூலி சட்டம் 1976, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1986 போன்ற முக்கியமான 14 தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது.இதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக ஒரு சட்டம் கொண்டுவரப்படுமாம். இதற்கு தொழில் நிறுவனங்கள் இனிமேல் போனஸ் கொடுக்காது என்று அர்த்தமில்லையாம், மகப்பேறு விடுப்பு மற்றும் பயன்களை தராது என்று அர்த்தமாகாதாம். இவையெல்லாம் ஆன்லைன் ஆக்கப்பட்டு, எளிமையாக்கப்பட்டு தென்றல் வீசுமாம் இந்தியா முழுமையும்!
கடைசியாக, பிரதமர் சொல்கிறார்... தொழிலாளர்கள் மற்ற ஒயிட் காலர் ஊழியர்களைப் போன்று மதிக்கப்பட வேண்டும் என்று! அவர்களது மரியாதையும் கண்ணியமும் காப்பாற்றப்பட்டால் தான் சமுதாயம் முன்னேற்றமடைய முடியும் என்று தொழிலாளர்களை ‘கடின உழைப்பாளிகளான யோகி’ என்றும், தேசத்தைக் கட்டியமைக்கும் யோகிகள் என்றும் வர்ணித்துள்ளார்.ஆஹா, என்னே கரிசனம்! லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ள இந்திய நாட்டில், ஒப்பந்தத் தொழிலாளர் முறையும், கேசுவல் தொழிலாளர் முறையும், மணிக் கூலி, தினக்கூலி, பீஸ் ரேட் முறையும் அதிகமாக உள்ள இந்த நாட்டில் எப்படி தொழிலாளர்கள் பாதுகாப்பாக, மரியாதையாக, கண்ணியமாக, வாழ முடியும்? குறைந்தபட்ச ஊதியம் ரூ.15000 பெற முடியாமல் எப்படி `ஒயிட் காலர்’ ஊழியர்களுக்கு நிகராக மதிக்கப்படும் வகையில் அவர்களது வாழ்க்கை முறை குறைந்தபட்ச மரியாதையும் கண்ணியமும் உடையதாக அமைய முடியும்?