Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 24, 2019

இந்திய ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைப்பதை நிறுத்து மத்திய அரசுக்கு சிஐடியு எச்சரிக்கை!

img

உலகின் மாபெரும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயை தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் மத்திய அரசு அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இதனை முறியடித்திட ரயில்வேயில் செயல்படும் அனைத்து சங்கங்களும் திரள வேண்டும் என்றும் சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சிஐடியு-வின் பொதுச் செயலாளர் தபன் சென் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்திய ரயில்வேதுறையைப் படிப்படியாகத் தனியாரிடம் ஒப்படைத்திட 100 நாட்கள் நடவடிக்கைத் திட்டம் ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சரின் ஒப்புதலுடன் மத்திய ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. 2019 ஆகஸ்ட் 31 வாக்கில் இதனைச் அமல்படுத்திட வேண்டும் என்று இந்திய ரயில்வே வாரியம் கட்டளையிட்டிருக்கிறது. 

இவற்றை சிஐடியு கடுமையாக எதிர்க்கிறது.

மேற்கண்ட நடவடிக்கைத் திட்டம், தனியார் பாசஞ்சர் ரயில்களை அறிமுகப்படுத்திட முன்மொழிவுகளை அளித்திருக்கிறது. நூறு நாட்களுக்குள் இரு பாசஞ்சர் ரயில்கள் ஐஆர்சிடிசி (IRCTC) எனப்படும்  இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் மூலமாக நடத்திடப் பணித்திருக்கிறது. இக்கழகம் டிக்கெட்டுகளையும் மற்றும் வண்டியின் சேவைகள் அனைத்தையும் மேற்கொண்டிடும். இந்த வண்டிகள் நாட்டின் மிக முக்கியமான மெட்ரோ நகரங்களை இணைக்கக்கூடிய முக்கிய மார்க்கங்களில் இயக்கப்படும்.  

நாட்டில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முதன்மையான ரயில்கள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்திட மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகவும், இதற்காக இன்னும் நான்கு மாதங்களுக்குள் டெண்டர்கள் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.ரயில் கட்டணங்களை உயர்த்திடவும் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. 

ரயில்வேயில் அளித்துவரும் அனைத்து மானியங்களையும் படிப்படியாக விலக்கிக் கொள்ளவும் அரசாங்கம் விரும்புகிறது. இன்றைய தினம் நாட்டில் ரயில் போக்குவரத்தை மிகவும் பெரும்பான்மையாக சார்ந்திருப்பவர்கள் ஏழை மற்றும் குறைந்த வருமானம் உள்ள மக்களாகும். இவர்களின் வயிற்றில் அடித்திட மத்திய அரசு இதன்மூலம் திட்டமிட்டிருக்கிறது. மிகவும் குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள வசதி செய்து தரவேண்டியது அரசின் அரசமைப்புச்சட்டப் பொறுப்பாகும். 

மானியங்கள் அளிப்பதைப் படிப்படியாகக் குறைத்து, கைவிடுவதோ மற்றும் ரயில் கட்டணங்களை உயர்த்துவதோ இறுதியில் ரயில்வேயை தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான அரசின் சூழ்ச்சியே தவிர வேறல்ல. தனியார், லாபத்தைக் குறியாகக் கொண்டே ரயில்களை இயக்குவார்கள். சாமானிய மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த மோடி அரசு, ஒரே மாத காலத்திற்குள் அவர்களின் வயிற்றில் அடித்திட முடிவெடுத்திருக்கிறது. 

தங்களுக்குக் கோடானுகோடி ரூபாய் தேர்தல் நிதி அளித்திட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட் எஜமானர்களைக் குஷிப்படுத்துவதற்காகவே மோடி அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.நடவடிக்கைத் திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான முன்மொழிவு, ரயில்வே துறை சார்பாக நாட்டில் இயங்கிவரும் ‘இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி’ உட்பட  ஏழு உற்பத்திப் பிரிவுகளையும் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கை எடுத்திருப்பதாகும்.

தாங்கள் கொண்டுவரும் முன்மொழிவுகள் சம்பந்தமாக தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசனை செய்யப்படும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலையேயாகும். இன்று வரையிலும், மோடி அரசாங்கம், பல பிரச்சனைகளில் தொழிற்சங்கங்கள் அளித்திடும் ஆலோசனைகள் எதையும் கண்டுகொண்டதே கிடையாது. உண்மையில், மத்தியத் தொழிற் சங்கங்கள் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை கடுமையாக எதிர்த்தே வந்திருக்கின்றன. ஆயினும், இத்தகைய எதிர்ப்பையும் மீறி 46 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மத்திய மோடி அரசு முடிவெடுத்துள்ளது.

மக்களுக்குச் சேவை செய்து வரும் ரயில்வே துறையைப் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைத்திட மத்திய மோடி அரசு மேற்கொண்டிருக்கும் இத்தகைய மக்கள் விரோத, ஊழியர் விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்தி முறியடித்திட நாட்டு மக்களும், நாட்டில் இயங்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும், சம்மேளனங்களும் முன் வர வேண்டும் என்று சிஐடியு அறைகூவி அழைக்கிறது.

அதேபோன்று ரயில்வே துறையில் இயங்கிடும் அனைத்துத் தொழிற்சங்கங்களும், அரசின் இந்த முடிவினைக் கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்றும், ரயில்வே ஊழியர்களின் வாழ்வில் நாசகரமான விளைவினை ஏற்படுத்திட இருக்கும் அரசின் இத்தகைய சூழ்ச்சியை ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் முறியடித்திட முன்வர வேண்டும் என்றும் சிஐடியு அறைகூவி  அழைக்கிறது.

இவ்வாறு தபன்சென் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.