Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, March 6, 2017

மாணிக் சர்க்காருக்கு காயிதே மில்லத் விருது




காயிதே மில்லத் கல்விமற்றும் சமூக அறக்கட்ட ளையின் 2017 ஆம் வருடத்தின் ‘’அரசியல் மற்றும் நேர்மைக்கான காயிதே மில்லத்” விருதிற்கான தேர்வுக் கமிட்டி கூட்டம் மார்ச் 3 அன்று சென்னையில் நடந்தது. மூன்று விருதாளர்களை குழு இறுதி செய்தது. 

இவ்வாண்டு விருதிற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்:

மாணிக் சர்க்கார்

1998-லிருந்து நான்காவது முறையாக திரிபுரா முதலமைச்சராகத் தேர்வு பெற்றவர். இந்திய மாணவர் சங்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர். தனக்கென்று கார் மற்றும் சொந்த வீடு இல்லாத நாட்டின் ஒரே முதலமைச்சர். தன் முதலமைச்சர் சம்பளத்தை கட்சிக்கு அளித்து விட்டு, கட்சி அளிக்கும் ரூபாய் 10 ஆயிரம் மற்றும் மனைவியின் ஓய்வூதியத்தில் தன் வாழ்வை நடத்துபவர். பல போராட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் உரியவர்.

ஜனாப் பி. முஹமது இஸ்மாயில்

குமரி மாவட்டம் குளச்சலில் பிறந்து வாழ்பவர். முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் இருந்து பல சமூக நீதி போராட்டங்களில் பங்காற்றியவர். தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர். குளச்சல் நகராட்சித் தலைவர், ஜமாத் தலைவர், பல கல்லூரிகளின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளை வகித்தவர். சாதி, மதங்களைக் கடந்து அனைத்துத் தரப்புமக்களாலும் போற்றப்படு பவர். இன்றும் எளிமை மற்றும் அரசியல் தூய்மைக்கு அடையாளமாக வாடகை வீட்டிலேயே வசிப்பவர்.

ஐரோம் சானு ஷர்மிளா

44 வயதாகும் இவர் மணிப்பூரின் இரும்பு மங்கை எனப்படுபவர். 2000 ஆம் ஆண்டு ‘மலோம் படுகொலை’ என்று அழைக்கப்படும் மணிப்பூர் பழங்குடி மக்களின் மீது அசாம் ரைபிள் துணை ராணுவம் நடத்திய தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர். ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958 ஐ ரத்து செய்ய வேண்டும் என்று 16 ஆண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி சமீபத்தில் அதனை முடித்து தனது கொள்கைகளை நிறைவேற்ற அரசியலுக்கு வந்தவர். நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மணிப்பூர் முதல்வருக்கு எதிராக போட்டியிடுகிறார். உலகிலேயே மிக நீண்ட உண்ணாநிலைப் போராட்டம் இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 30-ல் விருதுவிழா நடைபெறவுள்ளதாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை அறிவித் துள்ளது.

Image result for theekkathir logo