Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, April 4, 2016

ரயிலில் இடம் தேடி அமர்ந்த முதல்வர்




“ரயிலில் நான் கடந்த வியாழனன்று கவுகாத்தியில் இருந்து ஜார்கட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது பைஜாமா, குர்தா, வெள்ளை முடியுடன் ஒரு மனிதர் நான்கு பாதுகாவலர்களுடன் ரயிலில் ஏறினார். அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர் தான் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்.ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற எந்தவித ஆடம்பரங்களும் இல்லாமல் மிகவும் எளிமையாக 4 பாதுகாவலர்களுடன் ரயிலில் தனக்கான இடத்தை தேடி அமர்ந்தார்.

அப்போது அவர் அருகில் சென்று பேச எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் அவரிடம் சென்ற போது சர்க்கார் தன் இருக்கையை விட்டு எழுந்து என்னிடம் சாதாரணமாக பேசி எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.என் வாழ்நாளில் இதுபோன்று எளிமையான அரசியல் வாதியை நான் பார்த்ததே இல்லை” - என்று ஜார்கட்டைச் சேர்ந்த பி கோகய் என்பவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த தகவல்தான் இது.இதைத் தொடர்ந்து மறு நாள் காலையில் திரிபுரா முதல்வர் ஜார்கட்டிற்கு வருகை தந்ததையறிந்த அசாம் முதல்வர் தருண் கோகய், மாணிக் சர்க்கார் தங்கியிருந்த ஜார்கட் விருந்தினர் இல்லத்திற்கு சென்றார்.

அப்போதும் சர்க்கார்தான் அணிந்திருந்த கைலியுடன் எப்போதும் போல் அசாம் முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவரை சந்திக்க வந்த அசாம் முதல்வர் 100க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் புடை சூழ சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி மாணிக்சர்க்காரின் பாதுகாப்பிற்கு அசாம் மாநில மரபு படி ஏற்பாடுகளை செய்வதாக கூறினார்.ஆனால் சர்க்கார் உங்கள் மரபுப்படியே ஒரு பைலட் கார் மட்டும் பாதுகாப்பிற்கு போதும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் வியப்படைந்த அந்த காவல் அதிகாரி அசாமில் சாதாரண எம்எல்ஏக்களுக்கே போதுமான பாதுகாப்பு என்ற பெயரில் நாங்கள் அளிக்கும் பாதுகாப்பு போதும், போதும் என்று சொல்லும்படி அளவுக்கு அதிகமாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.- திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் கடந்த வாரம் இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அசாம் மாநிலம் ஜார்கட் நகருக்கு வந்தார். அவரது எளிமை மற்றும் சிக்கனம் ஆகியவற்றை கண்டு அசாம் மக்கள் வியப்பில் ஆழ்ந்ததாக டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியிலிருந்து...

Image result for theekkathir