Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, December 20, 2014

எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது


‘அஞ்ஞாடி’ நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு 2014ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தலித் படைப்பிலக்கியம் என்ற வகைமை உருவாகும் முன்பே ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பின்னணியாக கொண்டு ‘பிறகு’ என்ற கலாப்பூர்வமான நாவலை எழுதியவர் பூமணி.சிறுகதை, மொழிபெயர்ப்பு, சினிமா என பல தளங்களில் இயங்கிவரும் கரிசல் காட்டுப் படைப்பாளியான பூமணி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து எழுதிய நாவலான ‘அஞ்ஞாடி’-க்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நாவலை ஒரு கலைப்படைப்பாகவும் மானுடவியல் ஆவணமாகவும், வெவ்வேறு சமூகங்களின் வரலாற்று நூலாகவும் வாசிக்க முடியும். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கற்பனை கிராமமான கலிங்கல் என்ற ஊரில் ஒடுக்கப்பட்ட இரு சாதிகளைச் சேர்ந்த ஆண்டி மற்றும் மாரி என்ற இரு மனிதர்களின் குழந்தைப்பருவத்தில் இருந்து நாவல் தொடங்குகிறது.
காலம் 19-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. இந்திராகாந்திப் படுகொலையில் நாவல் முடிகிறது. இந்தக் காலப்பகுதியில், ஒரு ஊர் மற்றும் இரு குடும்பத்தினரின் வம்சபுராணமாக இல்லாமல், 19-ம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம் தொடங்கி, பாண்டியர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களின் யுத்தங்கள், ஜமீன்கள் உருவாக்கம், கழுகுமலை மற்றும் சிவகாசி சாதிக்கலவரங்கள், நாடார் மக்களின் எழுச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம்கூட்டமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போக்குகள் என ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கதைகளோடு பொதிந்து வைத்துள்ளது இந்த நாவல்.
19ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தாதுவருஷப் பஞ்சங்களின் போது மக்கள் அவதிப்பட்ட அனுபவங்களை ‘அஞ்ஞாடி’ போல இவ்வளவு தீவிரமாக வேறு எந்த நாவலாவது பதிவுசெய்திருக்குமா என்று தெரியவில்லை என எழுத்தாளர்கள் கூறுகின்றனர்.போர்கள், சண்டைகள், மோதல்களுக்கு நடுவில் ரத்தமும் சதையுமாக ‘அஞ்ஞாடி’ நாவலில் கதாபாத்திரங்கள் உலாவருகின்றனர். கிராமிய வாழ்க்கை நோக்குகள் கரிசல் மொழியில் அங்கதத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்து போன காலகட்டத்தின் வாழ்வாதாரம் மற்றும் பொருள்சார் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ளும் களஞ்சியமாகவும் இந்நாவலை வாசிக்கமுடியும்.எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். இவர் 1947-ம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.
இவர் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், வெக்கை, னைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.