Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, June 28, 2014

ஏப்ரல் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் தொலைபேசி இணைப்புகள் 93.58 கோடியாக அதிகரிப்பு














ஏப்ரல் மாதத்தில் தொலைபேசி இணைப்புகள் (செல்போன் மற்றும் லேண்டு லைன்) ஒட்டுமொத்த அளவில் 0.30 சதவீதம் மட்டும் அதிகரித்து 93.58 கோடியாக உயர்ந்துள்ளது. மார்ச் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 93.30 கோடியாக இருந்தது. தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) இத்தகவலை வெளியிட்டுள்ளது.

புதிய வாடிக்கையாளர்கள்

நகர்ப்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் இணைப்புகள் சற்று அதிகரித்ததால் ஏப்ரல் மாதத்தில் 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் பெற்றுள்ளன. அந்த மாதத்தில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களில் நகர்ப்புற வாடிக்கையாளர்கள் 55.63 கோடியாக உயர்ந்துள்ளனர். மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 55.53 கோடியாக இருந்தது. ஊரகப் பகுதிகளில் தொலைபேசி இணைப்புகள் 37.77 கோடியிலிருந்து 37.95 கோடியாக உயர்ந்துள்ளது.

மார்ச் மாதம் வரை 90.45 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் இணைப்புகள் 90.74 கோடியாக உயர்ந்துள்ளது. இது 0.32 சதவீத வளர்ச்சியாகும். நகர்ப்புறங்களில் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 53.27 கோடியிலிருந்து 53.39 கோடியாக உயர்ந்துள்ளது. கிராமங்களில் செல்போன் இணைப்புகள் 37.18 கோடியிலிருந்து 37.36 கோடியாக உயர்ந்துள்ளது.

செல்போன் இணைப்புகள்

மொத்த தொலைபேசி இணைப்புகளில் செல்போன் இணைப்புகள்தான் அதிகரித்து வருகிறது. லேண்டு லைன் இணைப்புகள் 2.84 கோடியாக குறைந்துள்ளது. இது, மார்ச் மாதத்தில் 2.85 கோடியாக இருந்தது.

ஏப்ரல் இறுதி நிலவரப்படி, மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் தனியார் நிறுவனங்களின் பங்கு 89.36 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு 10.64 சதவீதமாக உள்ளது.

இந்திய செல்போன் சேவைத்துறையில் வருவாய் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிறுவனம் புதிதாக 11.93 லட்சம் இணைப்புகளை வழங்கியுள்ளது. அடுத்து ஏர்செல் நிறுவனம் 9.98 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

டெலிவிங்ஸ் 9.69 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. ஐடியா செல்லுலார் நிறுவனம் 7.70 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. வோடாபோன் நிறுவனம் புதிதாக 7.31 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. வீடியோகான் 2.95 லட்சம் புதிய செல்போன் இணைப்புகளை வழங்கியுள்ளது.

செல்போன் வாடிக்கையாளர் ஒருவர் சேவையளிக்கும் நிறுவனத்தை மாற்றினாலும் பழைய எண்ணையே தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் எம்.என்.பி. வசதிக்காக ஏப்ரல் மாதத்தில் 22.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அம்மாத இறுதி நிலவரப்படி எம்.என்.பி. வசதி பெற்றுள்ளோர் எண்ணிக்கை 11.70 கோடியிலிருந்து 11.92 கோடியாக உயர்ந்துள்ளது.

அகண்ட அலைவரிசை

2014 ஏப்ரல் மாத நிலவரப்படி அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.45 சதவீதம் அதிகரித்து 6.09 கோடியிலிருந்து 6.17 கோடியாக உயர்ந்துள்ளது. பீ.எஸ்.என்.எல். நிறுவனம் அதிகபட்சமாக 1.69 கோடி அகண்ட அலைவரிசை இணைப்புகளை வழங்கியுள்ளது. அடுத்து பார்தி ஏர்டெல் (1.28 கோடி), ஐடியா (74.50 லட்சம்), வோடாபோன் (72.60 லட்சம்) மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (71.50 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.