Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 6, 2019

இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மகா எழுச்சி

ஏ.கே.பத்மநாபன்,சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர்
ஏப்ரல் 1918ல் துவக்கப்பட்ட மெட்ராஸ் தொழிற்சங்கமே இந்திய நாட்டில் முதன்முறையாக முறையாகத் துவக்கப்பட்ட தொழிற்சங்கமெனக் கருதப்படுகிறது. இத்தொழிற்சங்கம் உருவாக்கப்பட்ட நூறாவது ஆண்டில், தொழிலாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தொழிற்சங்கத்தை துவக்குவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது.


வரலாற்றின் பக்கங்களில் 2018ம் ஆண்டின் அத்தியாயம் நிறைவுற்று, புதிய அத்தியாயமாக 2019ம் ஆண்டு துவங்கியுள்ளது. வழக்கம் போல் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் புத்தாண்டு கொண்டு வந்துள்ளது. இந்திய மக்களுக்கும் கூட 2019ம் ஆண்டு நம்பிக்கைகளின் ஆண்டாகவே உள்ளது. முதல் நாளிலிருந்தே நல்ல முன்னேற்றத்திற்கான தீர்மானங்களின், எதிர்ப்புகளின், நம்பிக்கைகளின் நாட்களாகவே இப்புத்தாண்டு அமைந்துள்ளது. எதிர்வரும் நாட்கள் குறித்து நாம் சிந்திக்கத் துவங்குவதற்கு முன்னர், கடந்து சென்றுள்ள நாட்கள் குறித்து மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். ஐந்தாண்டுகளுக்கு முன்னர், 2014ம் ஆண்டில் இது போன்றதொரு நிலைமையே இருந்தது. ஜனநாயகத் திருவிழா எனச் சொல்லப்படும் பொதுத் தேர்தலுக்கான ஆண்டாக 2014ம் ஆண்டு இருந்தபோது, ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தன.அப்போது மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, விலைவாசியைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க, ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது. அதனால் மக்கள் கொதிப்படைந்தனர். சாதாரண மக்களின் நலன்களை காவு கொடுத்து கார்ப்பரேட்டுகளின் செல்வத்தை பெருக்கும் அரசின் கொள்கைகள் மீது அவர்கள் கோபம் கொண்டிருந்தனர். அத்தகையதொரு நிலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்ன நடந்தது என்பது தற்போது வரலாற்றின் பகுதியாக உள்ளது. மற்றொரு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள தற்போதைய நிலையில் எத்தகைய சூழல் நிலவுகிறது? தற்போது ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலைமை கடந்த நான்கரை ஆண்டுகளில் என்னவாக உள்ளது? தற்போதைய பாஜக அரசின் கொள்கைகளும், திட்டங்களும் சாதாரண மக்களுக்கு பயனளித்துள்ளது என சொல்லும்படியாக ஏதேனும் நடைபெற்றுள்ளதா? தொழிலாளர்கள், ஊழியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற கைவினைஞர்கள், சிறு வியாபாரிகள், சிறு- குறு தொழில்முனைவோர் ஆகிய சாதாரண மக்கள் பகுதியினரில் ஏதேனும் ஒரு பிரிவினராவது பயனடைந்துள்ளதாகக் கூற முடியுமா? நிறைய விஷயங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன;

போராட்டத்தில் ஈடுபடாத மக்களே இல்லை

இக்கால கட்டத்தில் நாம் பார்த்தது என்ன? கிட்டத்தட்டஇப்பகுதியினர் அனைவரும் துயருற்றனர். தெருவில் வந்து போராட கட்டாயப்படுத்தப்பட்டனர். தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களில் போராட்டத்தில் ஈடுபடாத பகுதியினர் என யாருமேஇல்லை. தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும்தொழிலாளர்கள், அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள், பல்வேறு பிரிவினராக உள்ள திட்டப்பணியாளர்கள், வங்கி, இன்சூரன்ஸ், தொலைதொடர்பு, போக்குவரத்து, மின்சாரம், பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், மத்திய- மாநில அரசு ஊழியர்கள் என யாராக வேண்டுமானாலும் இவர்கள் இருக்கலாம்.2014 முதல் 2018 வரை இந்த நாடு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான ஒட்டுமொத்த தாக்குதலை கண்கூடாகப் பார்த்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டன. மேலும் பல திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தற்போதைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்கள், தொலைதொடர்பு மற்றும் இதர பிரிவினருக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அளித்தஉத்தரவாதங்கள் வெற்று ஏமாற்று வார்த்தைகளாகவே போயின. ஊழியர்களுக்கு சாதகமாக ஊதியக்குழு அளித்த பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டன. பல பத்தாண்டுகள் கழித்து நீதிமன்றம் அளிக்கும் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்படுகின்றன.தொழிலாளர் நலத் துறையும், அமலாக்கப் பிரிவுகளும் பார்த்து வந்த கொஞ்சநஞ்சம் வேலைகளுக்கும் கூட முடிவுரை எழுதப்பட்டு அவை கட்டிப்போடப்பட்டுள்ளன. இத்துறைகளின் எல்லா நடவடிக்கைகளும் சுலபமாக வர்த்தகம் செய்வதற்கான குறியீட்டை மேம்படுத்திட, ‘சீர்திருத்த நடவடிக்கைகளின்’ பகுதியாகவே உள்ளன.

தொழிற்சங்கங்கள் துவங்கி 100வது ஆண்டில்...

ஏப்ரல் 1918ல் துவக்கப்பட்ட மெட்ராஸ் தொழிற்சங்கமே இந்திய நாட்டில் முதன்முறையாக முறையாகத் துவக்கப்பட்ட தொழிற்சங்கமெனக் கருதப்படுகிறது. இத்தொழிற்சங்கம் உருவாக்கப்பட்ட நூறாவது ஆண்டில், தொழிலாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தொழிற்சங்கத்தை துவக்குவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமையான தொழிற்சங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளைத்துவக்கியதற்காக மட்டுமே பல பிரதான தொழிற்பேட்டைகளில் பெரும் எண்ணிக்கையில் பழிவாங்கல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கூட்டுப்பேர உரிமை மறுக்கப்படுகிறது. அரசுக்கு விசுவாசமாக உள்ள தலைவர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சாதகமாக தொழிலாளர்கள் இல்லை என்பதாலேயே, நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு சில துறைகளிலும், இலாகாக்களிலும் நடைமுறைக்கு வந்த வாக்கெடுப்புகள், சரிபார்த்தல் மற்றும் ரகசிய வாக்கெடுப்பு ஆகிய நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, திரும்பப் பெறப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிஎம்எஸ் சங்கம் செய்வது என்ன?

ஆட்சியாளர்களால் தம்பட்டம் அடிக்கப்பட்டு வந்த முத்தரப்பு அமைப்பும் செயல்படாமலேயே உள்ளது. அப்படியே கட்டாயத்தின் காரணமாக கூட்டம் கூட்டப்பட்டாலும் அது வெறும் கேலிக் கூத்தாகவே உள்ளது. முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை விடுத்துள்ள அழைப்பை பிஎம்எஸ் நீங்கலாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் புறக்கணித்திடுகிற தற்போதைய நிலை குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். தொழிற்சங்கங்கள் முன்வைக்கிற எந்தவொரு ஆலோசனையையும் செவிமடுக்க அரசு விரும்பவில்லை என்பதே இதற்குக் காரணமாகும். அரசின் முடிவுகள் பலவற்றை பெயருக்காவது விமர்சிக்க வேண்டிய கட்டாயம் பிஎம்எஸ் சங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அரசின் அதிகாரிகள், ஆலோசகர்கள் மீது அதற்கான பழியைப் போடுகிறார்கள்.மத்திய அரசு கடைப்பிடிக்கும் அதே தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத கொள்கைகளையே பல மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களிலும் கூட இத்தகைய நிலைமையே நிலவுகிறது. இதில் விதிவிலக்காக தற்போது இருப்பது, தொழிலாளர் நலன் காக்கும் கொள்கைகளையும், முயற்சிகளையும் தொடர்ந்து செயல்படுத்தி வரும் கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு மட்டுமே ஆகும்.

அதிகரிக்கும் அசமத்துவம்

பொருளாதார கொள்கைகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து இங்கு விவரிக்கவில்லை. நாட்டின் சொத்துக்கள் விற்கப்படுகின்றன. வங்கிகள், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், சூறையாடப்படுவதும் தொடர்கிறது. ரயில்வே, பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களும் கூட கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப்பட்டு வருகின்றன.இத்தகைய நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த தாக்கமாக அசமத்துவம் அதிகரித்து வருகிறது. பணி நிலைமைகளில் நூதனமான முறைகளில் அதிக அளவில் சுரண்டல் புகுத்தப்படுவதால் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங், பயிற்சியாளர், அப்ரெண்டிஸ், இண்டெர்ன் மற்றும் தொழிலாளர்களை ஆளுமைப்படுத்துதல், அவர்களது திறன்களை வளர்த்தல் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்டங்கள் பணிப்பாதுகாப்பை முற்றிலுமாகப் பறித்து விட்டன.கிராமப்புற இந்தியாவின் நிலைமை இதிலிருந்து மாறுபட்டதாக இல்லை. விவசாயத் தொழிலாளர்களும், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளும் ஈவிரக்கமின்றி சூறையாடப்படுவதோடு சுரண்டப்படுகின்றனர். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது குறித்த அத்தனை பேச்சுக்களும் எந்த பயனையும் ஏற்படுத்தவில்லை.இதன் விளைவாக ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவும், பல மாநிலங்களிலும், தேசிய அளவிலும் மேற்கொள்ளப்பட்ட இயக்கங்கள் காரணமாகவும், நாடாளுமன்றம் நோக்கிய பேரணி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் திரண்டனர்.கடந்த சில ஆண்டுகளில் தொழிலாளர்களின் கூட்டுமேடை சார்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்ட இயக்கங்களைப் போன்று, விவசாயிகள் மற்றும் கிராமப்புற இந்தியாவில் செயல்பட்டு வரும் சமூக அமைப்புகளின் கூட்டு மேடை சார்பாக போராட்ட இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதியதோர் எழுச்சி

ஒட்டுமொத்தத்தில், தொழிலாளர்களின், ஊழியர்களின் அல்லது விவசாயிகளின் போராட்ட இயக்கங்கள் என எதுவாக இருந்தாலும் அதில் புதிய எழுச்சியை நம்மால் காண முடிகிறது.இதற்கு முன்னெப்பொழுதும் இத்தகைய விவசாயிகளின், தொழிலாளர்களின் போராட்ட இயக்கங்களை கண்டிராத மாநிலங்கள் கூட சமீபத்தில் இத்தகைய போராட்ட இயக்கங்களுக்கான களமாக அமைந்துள்ளன. சமீபத்தில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்ட இயக்கங்கள் புதிய மக்கள் பகுதியினரை இவ்வியக்கங்களில் ஈர்த்துள்ளன.தொழிலாளர்களிலும் கூட புதிய பகுதியினர் போராட்ட இயக்கங்களில் பங்கேற்பதை நம்மால் காண முடிகிறது. ஆதரவு இயக்கங்களும் பெரும் எண்ணிக்கையில் நடைபெறுவதை தற்போது காண முடிகிறது. எங்கெல்லாம் திட்டமிட்ட முறையில் தொழிற்சங்கங்கள் மற்றும் இதர அமைப்புகளால் நாசகரமான கொள்கையின் பிரச்சனைகள் குறித்து எளிய மக்களிடையே கொண்டு செல்ல முடிந்திருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்களது போராட்ட இயக்கங்களுக்கு மக்களும் தங்களது ஆதரவை அளித்துள்ளனர்.

மக்களைத் தூண்டிவிட முயற்சிக்கும் ஆளும் வர்க்கம்

தன்னெழுச்சியான மற்றும் தனித்தன்மையான போராட்டங்கள் உட்பட ஒன்றுபட்ட போராட்டங்கள் நாளுக்கு நாள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஆளும் வர்க்கமும், அவர்களது அமைப்புகளும் மும்முரமாக உள்ளன. ஒருபுறம், மக்களை மதரீதியாக பிரிப்பதுடன், கடவுள்களையும் கோயில்களையும் பயன்படுத்தி தங்களது தொண்டர்களை ஊக்குவித்து வருகின்றனர். மறுபுறமோ, யதேச்சதிகாரத்தை வலுப்படுத்திடவும், சாதாரண மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீது ஜனநாயக விரோதமான தாக்குதல்களை தொடுத்திடவும் அரசு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இத்தகையதொரு சூழலில், உழைப்பாளி மக்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளி மக்கள் போராட்ட களத்தில் உள்ளனர்.

எழுச்சிமிகு பேரணிகள்

செப்டம்பர் 5ம் தேதி நடைபெற்ற தொழிலாளர்கள்-விவசாயிகள் பேரணி, செப்டம்பர் 4ம் தேதி நடைபெற்ற பெண்கள் பேரணி, வேலைவாய்ப்புகள் கோரி இளைஞர்கள் நவம்பர் 3ம் தேதி நடத்திய பேரணி, நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் விவசாயிகள் நடத்திய பேரணி ஆகியவை எல்லாம் பல்வேறு கொள்கை சார்ந்த பிரச்சனைகளில் நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களின் உச்சகட்டமாக நடைபெற்ற இயக்கங்களாகும். அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் பல துறைவாரியான, மண்டல மற்றும் உள்ளூர் அளவிலான போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் நடைபெற்றுள்ளன.சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்த பிரச்சாரத்திற்கான களமாக ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் களமும் அமைந்தது.

ஜனவரி 8,9 வேலைநிறுத்தம்

இத்தகைய பின்னணியில், 2018ம் ஆண்டு முடிவுபெற இருந்த நிலையில், ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் 48 மணி நேர நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகள் உற்சாகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஒட்டுமொத்த தேசமும் கண்ணுற்றது. 2015 மற்றும் 2016 ஆகிய இரு ஆண்டுகளில் செப்டம்பர் 2ம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தங்கள், நவம்பர் 2017-ல் பல லட்சக்கணக்கான ஆண், பெண்களின் பங்கேற்போடு 3 நாட்கள் நடைபெற்ற ‘மகாபடாவ்’ எனும் மகா முற்றுகைப்போர் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இந்த வேலை நிறுத்தத்திற்குபிஎம்எஸ் நீங்கலாக இதர மத்திய தொழிற்சங்கங்களும், தேசிய அளவிலான சம்மேளனங்களும் அறைகூவல் விடுத்தன. போராட்டத்தில்ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் சார்ந்த பல அமைப்புகளும் இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.தேசிய அளவிலும், பல்வேறு துறைவாரியான அமைப்புகளும் சமர்ப்பித்துள்ள கோரிக்கை சாசனம் அரசின் கொள்கைகளை குறி வைத்தே உள்ளன. இக்கொள்கைகள் குறித்த விவரங்கள் மக்களிடையே பிரச்சாரமாகக் கொண்டு செல்லப்பட்டு, விவரிக்கப்பட்டுள்ளன. மாற்றுக் கொள்கையையே வேலைநிறுத்தம் கோருகின்றது. இப்புத்தாண்டின் எல்லா நாட்களிலும் இத்தகைய போராட்ட இயக்கங்களை உழைப்பாளி மக்கள் முன்னெடுத்துச் செல்வர். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களை தூக்கியெறிந்து, கொள்கைகளில் மாற்றத்தை உத்தரவாதம் செய்திட இந்த பிரச்சனைகள் குறித்தெல்லாம் மக்களிடையே விரிவான முறையில் முன்னெடுத்துச் சென்று விவாதித்திட பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சாரத்திற்கான காலமும் ஓர் வாய்ப்பாக அமையும்.

புதிதாகப் பிறந்துள்ள 2019ம் ஆண்டு தீவிரமான வர்க்கப் போராட்டங்களின் ஆண்டாக அமையட்டும்